ஞாயிறு, 30 ஜூலை, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்


அந்நியன் மரம்!!!???.... மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!

மலர்ந்துவிட்டேன் நான்!
காத்திருக்கிறேன் 
என் தேனினைப் பருக வரும்
என் காதலன் வண்டிற்காக!
சூரியன் வந்துவிட்டான்!
காதலனே! எங்கே சென்றாய்?
என் தேனும் வற்றுகிறதே! 
 
காத்திருந்துக் காத்திருந்து 
பொழுதே சாய்ந்திட்டது
என் காதலனைக் காணாது
என் மகரந்தமும் சோர்ந்துவிட்டது!
 
நாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள்! எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா!!
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறோம்
வாழ்வதே ஒரு நாள்!
இடையில் எங்களை 
ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்!
நீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே! நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே! 
நாங்கள் மலர்வதே 
உங்களை மகிழ்விக்கத்தான்! 
உங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு 
மரணமடைகிறோம்!
உங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு
மரணமடைகிறோம்! 
முரண்!
 
பூப்போன்ற பூவையர் 
என்று  உவமையுடன் 
சொல்லும்  நீங்கள்
பூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ?
பூப்போன்ற பூவையரை
 மிதித்துத் துன்புறுத்தாதீர்
என்று குரல் கொடுக்கும் நீங்கள்
இளம் பூவையர் எங்களையும்
காப்பதற்குக் குரல் கொடுங்களேன்!
பூப்போன்ற மனம்
என்று சொல்லிவிட்டு
வேதனையுறும் வார்த்தைகளை
உதிர்க்கலாமோ?
எங்களயும்தான்!
நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!

நாங்கள் வீழ நினைப்பதும் நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்!

உங்கள் வீடு வண்மா வேண்டுமா?! எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள்! நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல! எங்களைப் போற்றுங்கள்! உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்! 
வண்ணத்துப் பூச்சிகளுடன், புள்ளினங்களுடன்!

 நாங்கள் மிகவும் பொறுமைசாலிகள்! சரிதானே!!?

எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!

நான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா!!

யப்பா! என்ன வெயில்! நீங்களெல்லாம் வெயிலுக்கு ஒதுங்கிடறீங்க! எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா! கருத்துப் போயிடுவோம்ல!  

இயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்!

இயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்! உங்களுக்கும் அது பரவட்டும்! 
நாங்கள் ஒவ்வொருவரும் மலர்கிறோம்! அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை! 

 எங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்!




வண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்
நாங்களும் அழகுதான் இல்லையா!

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது! எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு! ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம். 
வித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 

-----கீதா




திங்கள், 17 ஜூலை, 2017

சந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்

உலகம் சுற்றும் வாலிபர் என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும் அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா!!!!! தலைநகரிலிருந்து உள்நாடு சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன் எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான் சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.

இச்சந்திப்பைப் பற்றி வந்ததும் எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம். அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மிக்க நன்றி வெங்கட்ஜி!

நான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும், எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும் வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன். அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை. நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச் சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். சந்தித்தார்.

விழா குர்காவ்னில் இருந்த என் தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள் என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும் சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.

வெங்கட்ஜி 6 அடியார் என்பதால் கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில், நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக் கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித் துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.

இரு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.



1. சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு: வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்பிரமணியன்


2. தனது “ஒரு சிறு இசை” எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) கவிதைகள்.

எதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப் புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின் காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொன்னார். துப்புவது எங்கள் உரிமை என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html

ஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின் அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம் கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.  

ரயில் புறப்படுவதற்குச் சற்று முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின் போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.

சமீபகால சிறுகதைத் துறையில் தடம் பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது, சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி, தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ. யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.

கல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள் புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல! இரு முத்தான புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு!

----கீதா

திங்கள், 3 ஜூலை, 2017

காலம் தவறிய உணர்வுகள்

எங்கள் ப்ளாகின் மற்றொரு தளமான https://engalcreations.blogspot.in இல் கேஜிஜி - கௌதம் அண்ணா அவர்கள் க க க போ தெரியுமா? என்று அறிவித்திட....அதென்னா கககபோ என்று கேட்பவர்களுக்கு....கண்டிஷனல் கருவிற்குக் கதை போடத் தெரியுமா?!!! அதாவது ஒரு கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி அறிவித்திருந்தார். கடைசி வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள் என்று முடியவேண்டும் என்ற விதியும் விதித்திருந்தார்!!!!! முதலில் சட்டென்று கதை போட்டார் நம் நண்பர் நெல்லைத் தமிழன் அதுவும் தான் வரைந்த கதைக்கான அழகான படத்துடன்  https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_19.html 
அதே கருவில் குரோம்பேட்டை குறும்பனின் கதையின் லிங்க் இதோ
https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_22.html
கககபோ 2 ற்கு நெல்லைத் தமிழனின் கதையின் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/06/2.html
கககபோ 2 ற்கு சகோ துரை செல்வராஜு அவர்களின் கதையின் லிங்க்  https://engalcreations.blogspot.in/2017/07/blog-post.html

நான் எழுதிய கதைதான் இதோ இங்கு. அங்கும் வெளியானது. அதன் லிங்க் இதோ...இப்போது இரண்டாவது கருவும் வந்துவிட்டது. நான் இனிதான் எழுத வேண்டும். நீங்களும் நம்ம ஏரியாவுக்கு விசிட் செய்து அங்கு தரப்படும் கருவிற்குக் கதை எழுதலாம். கதையை அங்கு வெளியிட்ட பின்னர் உங்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் kggouthaman@gmail.com, sri.esi89@gmail.com


மிக்க நன்றி கௌதம் அண்ணா மற்றும் ஸ்ரீராம். இப்படி என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும்  கதைகள் எழுத ஊக்குவித்து, வெளியிட்டுக் கௌரவிப்பதற்கு. மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றியும், வணக்கங்களும்! உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகளும்!

பொற்காசுகள் உண்டா என்பதை ஸ்ரீராமிடமும், கௌதம் அண்ணாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளூங்கள் ஹிஹிஹி...
சரி இதோ கதைக்குப் போகலாம் வாங்க.....