ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கேடில் விழுச்செல்வம் கல்வி???!!!!

இது சற்று பெரிய பதிவுதான். பொருத்துக் கொள்ளுங்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி! இது நம் ஐயனின் வாக்கு.  அதாவது கல்வியே செல்வம் என்றார்.  ஆனால், இங்கு செல்வம் இருந்தால்தான் கல்வி என்றாகியிருக்கிறது.

மனதிற்கு வேதனை அளித்த ஒரு நிகழ்வுதான், மூன்று மருத்துவ மாணவிகளின் தற்கொலை.  இந்தத் தற்கொலையைப் பற்றி நம் நண்பர் விசு அவர்களும் ஒரு பதிவு எழுதியிருந்தார். http://vishcornelius.blogspot.com/2016/01/blog-post_27.html

இதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் பட்டியலில் வருபவர்கள் பதில் சொல்லுவதால் உயிர்கள் மீளப்போவதில்லைதான். ஆனால், அந்தப் பட்டியலில் வருபவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பானவர்களே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் எனது மற்றொரு கருத்தையும், இது போன்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் முன்வைக்கத்தான் இந்தப் பதிவு. அந்த மற்றொரு கருத்திற்கு முன்...

பொறியியல், மருத்துவம் (நல்லகாலம் தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத் துறையில் தனியார்கள் கல்லூரிகள் இல்லை) ஏன் விவசாயப்படிப்பிற்குக் கூட தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகத்தின் கீழும், அரசின் கீழும் அதாவது அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழும் காளான்கள் போல் முளைத்திருக்கின்றன.

பொறியியல் கல்லூரி என்றால் ஒவ்வொரு துறைக்கும் AICTE (All India Council of Technical Education) அக்ரெடிட்டேஷன் பெற வேண்டும். அப்படிக் கிடைக்க அந்தக் கல்லூரிகள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்கின்றன, எவ்வளவு பெட்டிகள் கைமாறின/மாறுகின்றன இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன, எப்படி இத்தனைக் கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதன் ரிஷிமூலம், நதி மூலம் ஆராயத் தொடங்கினால் பல அதிர்ச்சியானத் தகவல்கள் கிடைக்கும்.

இதில் எத்தனைக் கல்லூரிகள் அந்தந்தத் துறைக்கு வேண்டிய எல்லா வசதிகள், தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள், செய்முறைக் கூடங்கள் என்று செயல்படுகின்றன என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே.

நமது கல்வித்துறை ஊழல்கள் நிறைந்தத் துறையாகி நிற்பதுக் கண்கூடாகத் தெரிந்தும் நம்மால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதது மிக மிக வேதனைக்குரியது. நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே. ஏனென்றால் நம் குழந்தைகளும் இந்தக் கல்விக்கூடங்களின் மாணவ, மாணவிகளாய் இருக்கும் தலைவிதியை நினைத்து.

பொறியியல் கல்லூரிகளுக்கே இப்படி என்றால், உயிரைப் பாதுகாக்கும் கல்வியைப் போதிக்கும் மருத்துவக் கல்லூரிகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இதில் அடக்கம். அப்படிப்பட்ட ஒரு தனியார் கல்லூரிதான் சமீபத்தில் சீல்வைக்கப்பட்ட, விழுப்புர மாவட்ட கள்ளக்குறிச்சி இயற்கை/சித்த மருத்துவக் கல்லூரியும்.

இந்தக் கல்லூரி ஆரம்பிக்க எப்படி அனுமதி கிடைத்தது? மருத்துவப் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது? 

எல்லா வசதிகளும், செய்முறைக் கூடங்களும், நல்ல விரிவுரையாளர்களும் இருக்கின்றார்களா என்ற தணிக்கை செய்யப்படவில்லையா? தணிக்கை செய்யப்பட்டுத்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றால் எவ்வளவு பணம் கைமாறியது? இந்தக் கல்லூரியை நடத்துபவர்களின் பின்புலம் என்ன?

மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, நாம் விரும்பும் துறை எந்தக் கல்லூரியில் கிடைக்கின்றது, அந்தக் கல்லூரி தரம் வாய்ந்தக் கல்லூரியா, செய்முறைக்கூடங்கள் நன்றாகச் செயல்படுகின்றனவா, கல்வியின் தரம், காம்பஸ் இன்டெர்வ்யூ உண்டா, அதன் சான்றிதழ் வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்வளவு மதிப்புடையது, என்ற பல விவரங்களையும் நாம் தனிப்பட்ட முறையிலும், அதன் முந்தைய மாணவர்களிடம் கேட்டும், அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, நாம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தரம் வாய்ந்த கல்லூரிகள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாணவ மாணவியர், தாங்கள் விரும்பிய துறையில் படிக்க ஆசைப்படுவதோ, பெற்றோர்கள் படிக்கவைக்க நினைப்பதோ தவறில்லை. ஆனால், நமது கட் ஆஃப் மார்க்கின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் கல்லூரி தரமற்றதாக இருந்தால் அதில் சேர்ந்து படிப்பதைவிட வேறு வழிகளை ஆலோசிக்கலாமே.

இந்த விழுப்புர சித்த மருத்துவக் கல்லூரியில் சேரும் முன், பெற்றோரும், மாணவ, மாணவிகள், தற்கொலை செய்து கொண்ட அந்த மூன்று மாணவிகள் உட்பட அரசு கவுன்சலிங்கில் கிடைத்திருந்தாலும், இந்தக் கல்லூரியைக் குறித்துச் சற்று ஆராய்ந்திருக்கலாம். இது போன்றக் கல்லூரிகளைக் குறித்துச் சாமானியர்கள் நாம் போராட முடியாது. அதற்கான பலம் நம்மிடம் இல்லாத போது நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசு கவுன்சலிங்கிலேயே கிடைத்தாலும் கூட என்றுதான் தோன்றுகின்றது.

தற்போதெல்லாம் மாணவர்களின் கட் ஆஃப் ரேங்கிற்கு நல்ல கல்லூரி, அரசுக் கவுன்சலிங்கில் கிடைக்க வாய்ப்பில்லை என்றறிந்ததும், பிற கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலோ பணம் கொடுத்து உறுதிப் படுத்திக் கொண்டுவிடுகின்றனர். சாமானிய மாணவர்களால் இப்படிப் படிக்க இயலுமா? பாவம் அப்படித் தான் விரும்பும் துறையைப் படிக்க நேரும் போதுதான் மன அழுத்தமும், பிரச்சனைகளும்.

பொறியியலாளராக, மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தரமற்றக் கல்லூரிகளிலும் கூட சேரத் துடிப்பதால்தான், இன்று காளான்கள் போல பல தனியார் கல்லூரிகள் முளைத்துக் கல்வியை வியாபரமாக்கியிருக்கின்றன.

அரசும் இதற்கு உடந்தையாக இருப்பதால் கல்வித்துறையே ஊழலாகி உள்ளது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, உழைத்துக் குருவி சேர்ப்பது போல் சேர்த்தப் பணத்தை இப்படி இழக்க வேண்டுமா? சற்று யோசியுங்கள் பெற்றோர்களே, மாணவர்களே!

மாணவர்களும், பெற்றோர்களும் நினைத்தால், முனைந்தால் இந்த நிலையை மாற்ற முடியும். ஏதேனும் என்ஜிஓ (NGO) பொதுநல வழக்குத் தொடர்ந்தேனும்  இந்த நிலையை மாற்றலாம். எனக்கு இந்த மாணவிகளின் மீது கோபமும், வருத்தமும்தான் வருகின்றது கல்லூரியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் சேர்ந்துவிட்டுத் தொடர்ந்து போராட இயலாமல், தற்கொலைதான் ஒரே தீர்வு என்று முடிவெடுத்திருக்கின்றார்களே என்று. இப்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போலவே.

எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் கல்வியின் தரம் அறிந்து மேற்படிப்பு பற்றிய முடிவுகள் எடுப்பதில் விழிப்புணர்வுடனும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கல்வித்துறையை அரசியலிலிருந்து விலக்கித் தனியாக இயங்க வைத்துச் சட்டத்தைக் கடுமையாக்கிச் செயல்பட வைத்தால் மட்டுமே கல்வித்துறை உருப்பட்டு சாமானியர்களும் பயன் பெற முடியும். இல்லையேல் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

(உலகமே, குறிப்பாக இந்திய மாணவர்கள் உயர்கல்வியின் கனவு தேசமாய்க் கருதும் அமெரிக்காவிலும், அரசு அனுமதி பெற்றுத் தனியார் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், ஃபெடரல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் செயல்படுவது தெரிந்தால், அங்கு சட்டங்கள் கடுமையாக இருப்பதால், “ப்ளாக் லிஸ்ட்” பட்டியலில் அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு மூடப்பட்டுவிடுகின்றன.

அந்தப் பட்டியலில், 2011ல் அதிகம் பேசப்பட்டவை ஹெர்குஅன் பல்கலைக்கழகம்(Herguan University) ட்ரை வாலி (Try Valley) பல்கலைக்கழகம். சமீபத்தில் சிலிக்கன் வாலி பல்கலைக்கழகமும், நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகமும் அந்தப் பட்டியலில். நீங்கள் ஊடகங்களிலிருந்து அறிந்திருப்பீர்கள். இந்தப் பல்கலைக்கழகங்களின் இந்திய மாணவர்களில் பெரும்பான்மையோர் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பல்கலைக்கழகங்கள் சிக்கியதன் காரணங்கள் வேறு. மட்டுமல்ல அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  இங்கு?)

இதோ உங்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி. Even medical Seats under “merit quota” are sold, says report.  அதன் முழுத் தகவலையும் வாசிக்க இந்தச் சுட்டி www.timesofindia.com நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

--கீதா






திங்கள், 25 ஜனவரி, 2016

இது எப்படி இருக்கு?


Image result for a teenager with puppy and cricket bat

Image result for a teenage boy with puppy


படங்கள் இணையத்திலிருந்து

மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். உறவினர் வீட்டுப் பையன் இந்த வருடம் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகின்றான். எனவே, அவன் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகின்றான், 11 ஆம் வகுப்பில் அவன் விருப்பப்பாடம் என்ன எடுக்க விரும்புகின்றான் என்று பையனிடம் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“டேய் இவ்வளவு நாள் விட்டாச்சு. கிரிக்கெட் கோச்சிங்க் போற..சரிதான்.  ஆனா, அது மட்டுமே அப்படினு எல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களுக்குச் சரிப்பட்டு வராது. இப்பவாவது நீ தீர்மானிக்கணும் இல்லையாடா? அடுத்து என்ன பண்ணணும், என்ன பாடம் எடுக்கணும் அப்படினு?”

“நீங்களே ஏதாவது சொல்லுங்களேன். நான் யோசிக்கறேன்” என்றான்.
“டாக்டருக்குப் படிக்கறயாடா?”

“என்னது டாக்டரா? 24 ஹவர்ஸ் + லைஃப் முழுசும் நோயாளிங்களோடுதான் இருக்கணும். என்னை இருக்கச் சொல்றீங்களா. நோ சான்ஸ்”

“சரி எஞ்சினியர் ஆகறியாடா?”

“அதுக்குத்தான் வீட்டுல ரெண்டு பேர் இருக்கீங்களே! (உறவினர்கள் இருவர்) அப்புறம் நான் வேற எதுக்கு எஞ்சினீயர் ஆகணும்.”

“அது சரி! அப்ப சி ஏ படிக்கறியாடா?”

“அப்படின்னா?”

“கணக்குப் பிள்ளை/ஆடிட்டர். கம்பெனி, மத்தவங்களோட கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும்.”

“நான் எதுக்கு மத்தவங்க லைஃப்ல, ஃபைனான்சியல் மாட்டர்ல மூக்கை நுழைக்கணும். நான் நுழைய மாட்டேன்.  பக்கா ஜென்டில்மேன் நான்”

“சரி. ஆடிட்டர் வேண்டாம், ஃபினான்சியல் கன்சல்டண்டா?”

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?”

“உங்க அம்மா இப்ப என்ன பண்ணறாங்க அதுதான்..”

“ஐயோ...எங்க அம்மா அதத்தான் பண்ணிக்கிட்டுருக்காங்க. நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் இதுல இன்வெஸ்ட் பண்ணு அதுல பண்ணு அப்படினு.”

“பைலட்?”

“என் உயிருக்கு உத்தரவாதமே இல்லையே. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில எல்லாம் பண்ணச் சொல்றீங்களே”

“ஓகே....நீதான் நாலுகால் செல்லங்களோட விளையாடற. கொஞ்சற. வீட்டுலயும் ஒண்ணு வேணும்னு அடம் பிடிக்கற. ஸோ வெட்னரியன் ஆகிடறியாடா?”

“நான் நாலுகால் செல்லங்களைக் கொஞ்சத்தான் செய்வேன். நீங்க என்னடான்னா அறுக்கச் சொல்றீங்களே. சரி வேற?”

“சரி, ப்ரொஃபசர்/டீச்சர்? நிறைய லீவெல்லாம் கிடைக்கும்...எப்படி?”

“நான் படிக்கறதே கஷ்டமா இருக்கு. நானே ஸ்கூல்ல அடங்கறது இல்ல. இதுல பசங்களுக்கு வேற என் தொண்டத்தண்ணி வத்த சொல்லிக் கொடுக்கற வேலையா? ஸாரி”

எங்கள் நண்பர் ஒருவர் பெரிய நிலையில் இருக்கின்றார்.  அவரதுப் புகைப்படத்தைக் காட்டி

“இவரைப் போல் ஆகறியா.  கையெழுத்து மட்டும் போட்டா போதும்.”

“ஹை! இது நல்ல டீலா இருக்கே”

“ஹலோ...அதுக்கும் 25 வருஷம் உழைக்கணும். சும்மா இல்ல. அப்பதான் அந்தப் பொசிஷனை அடைய முடியும்”

“ம்ம்ம்...அந்த 25 வருஷம்றதுதான் உதைக்குது. அது எல்லாம் சரிப்பட்டு வராது... கையெழுத்து மட்டும் போடறதுனா ஓகே! நல்ல டீல்தான்.  ஒரு பக்கம் நாலுகால் செல்லங்களைக் கொஞ்சல், இன்னுரு பக்கம் கிரிக்கெட் நடுல நான் கையெழுத்துப் போடற வேலை...இது நல்லாருக்கு ஓகே!”

“என்னடா எதச் சொன்னாலும் இப்படிப் பேசற”

“நானே என் எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்படல.  நீங்க எல்லாரும் எதுக்கு என் எதிர்காலத்தைப் பத்தி இப்படி மண்டைய உடைச்சுக் குழப்பிக்கறீங்கனு தெரியல....சரி..அத விடுங்க... நாம அன்னிக்குப் பார்த்துட்டு வந்த லாப்ரடார் பப்பிய எப்ப எனக்கு வாங்கித் தரப்போறீங்க?"

(நேற்று என் மகனின் வருகை. துளசியும் ரொம்ப பிசி. எனவே நம் நண்பர்கள் உங்கள்  வலைத்தளத்திற்கு வருவது சிரமமாக அல்லது சற்றுத் தாமதமாகின்றது. இடையிடையில் வருகின்றோம்...)

---கீதா


புதன், 20 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம் 5 - ஊண்டவல்லிக் குகைகள்/குடைவரை


உண்டவல்லிக் குகைகள்/ஊண்டவல்லிக் குகைகள்- உண்டவல்லி செல்ல பேருந்துகள் பற்றி தெனாலி பேருந்து நிலையத்தில் கேட்ட போது அவர்களுக்கு முதலில் புரியவில்லை. பின்னர் நாங்கள் விளக்கியதும் அவர்கள் உச்சரிப்பு இப்படி இருந்தது. “ஊண்டவல்லி” என்று. அதனால்தான் ஊண்டவல்லி என்று நான் எழுதுகின்றேன்.
 எவ்வகையிலும் இவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம், தண்டனை என்று எழுதிவைக்கப்பட்டிருந்தாலும் நம் மக்கள் கிறுக்கித் தள்ளுவதில் வல்லவர்களாயிற்றே! கண்டதையும் கிறுக்கித் தள்ளியிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் தண்டனை கிடையாதோ?!
படி ஏறி விட்டீர்களா?
சரி இப்போது ஊண்டவல்லிக் குகைகளைக் காண நாம் வந்துவிட்டோம். உள்ளே செல்லுவதற்கு முன் ஒரு சிறிய முன்னுரை. குகைகள் என்று சொல்லுவதை விட ஊண்டவல்லிக் குடைவரைகள்/குடைவரைக் கோயில் என்று சொல்லலாமோ என்று தோன்றுகின்றது.

மிக அழகான இடம். தொல்பொருளாராய்ச்சித் துறையின் கீழ். ஆனால், சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பது வேதனைதான். இந்தக் குடைவரைகள் 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாறு சொல்லுகின்றது. உள்ளே செல்வதற்கு நுழைவுக்கட்டணம் ரூ 5. புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் இல்லை.  வீடியோ காமேரா என்றால் ரூ 15.

எப்பொதுமே நான் ஒரு இடத்திற்குச் செல்லும் முன் குறிப்பாக, சுற்றிப்பார்க்க என்றால், அந்த இடம் எவ்வளவு தூரம், எப்படிச் செல்ல முடியும், தங்கும் அவசியம் இருக்குமா இல்லை ஒரே நாளில் முடிக்க முடியுமா, அருகில் வேறு இடங்கள் உள்ளனவா சுற்றிப் பார்க்க, அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை, என்று பல விவரங்களைத் திரட்டிவிட்டுத் திட்டமிட்டுச் செல்வது உண்டு என்பதால் அப்படி இந்தக் குகைகளைப் பற்றித் தேடிய போது இந்தக் குடைவரைகளுடன் விஷ்ணுகுந்தின் அரசர்களுக்குத் (கிபி 420-620) தொடர்பு உண்டு என்றும், முக்கியமாக அனந்தபத்மநாப சுவாமிக்கும், நரசிம்மருக்கும் அர்ப்பணிப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிந்தது.

இப்போது நான் பார்த்த விவரங்கள். குடைவரைகள் 4 தளங்களாக உள்ளன. கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என்று. கீழ்த்தளம் குடைவரைகள் மட்டுமே. பல பிரிவுகள். 6, 7 இருக்கும் என்று நினைக்கின்றேன். இவை பௌத்தத் துறவிகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகின்றது. இருக்கலாம். அருகில்தானே அமராவதியில் பௌத்த ஸ்தூபி இருக்கிறது. இப்போது வொவ்வால்களின் குடும்பங்களின் உறைவிடம். பாவம் அவை எங்கு செல்லும். பலரும் மூக்கைப் பொத்திக் கொண்டுச் சென்றார்கள். ஆனால், எனக்கோ மணம், குணம், ருசி எதுவும் தெரியாதே! அதைப் பற்றித் தனி பதிவு இட உள்ளேன். விழிப்புணர்விற்காக.

சரி, ஒவ்வொரு தளமாக விவரித்து எழுதுவதைவிட, வாருங்கள் உங்களை ஒவ்வொரு தளமாக அழைத்துச் செல்லுகின்றேன். மூன்று மூர்த்திகளும் இருக்கின்றார்கள். துர்கை/மஹிஷாசுரமர்த்தினி ரூபத்தில். சிறப்பு என்னவென்றால் அனந்தபத்மநாப ஸ்வாமி...வாருங்கள்
படி ஏறி வந்துவிட்டீர்களா? இதுதான் குடைவரைக் கோயில். 4 தளங்கள் தெரிகின்றதா..வாருங்கள்..உள்ளே செல்வோம். மற்றொரு புகைப்படம் இன்னும் சற்றுத் தெளிவாக இருந்தது ஆனால் அதில் பல மக்கள் தெளிவாகத் தெரிந்ததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். காமேரா இல்லாதது கைஒடிந்த மாதிரி இருந்தது/இருக்கின்றது
கீழ்த்தளம்-கீழே இன்னும் இரு படங்கள்- கீழ்த்தளத்தில் அவ்வளவாக ஒன்றும் இல்லை. குகைதான். ஆனாலும் அழகு. 

இதுவும் கீழ்த்தளம்தான். பல பிரிவுகள். குழந்தைகள் ஓடி ஒளிந்து விளையாட ஏற்ற இடம்! புகைப்படத்திற்கும்!! இதனால்தான் ஜோடிகளின் கூட்டமும், விதவிதமான கோணங்களில், போஸ்களில் ஃப்ளாஷ்களும் மின்னுகின்றன!
அப்படியே வெளியே வந்து கரடுமுரடான படிகளில் வேண்டுமென்றால் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு முதல் தளத்திற்கு வாருங்கள். இதுதான் முதல் தளம். படியேறினால் தெய்வ உருவங்கள் பல தரிசித்திட.

படி ஏறி வாருங்கள் உள்ளே செல்ல.  இது தவிர மேலே உள்ள படத்தில் அந்தப் பக்கவாட்டின் வழியாகவும், கீழ்த்தளத்தில் பார்த்தது போல் உள்ளே நுழையமுடியும் அங்குதான் அடுத்த தளத்திற்குச் செல்லும் படிகள் இருக்கின்றன காட்டுகின்றேன்.  இப்போது இதன் உள்ளே.
கீழ்த்தளம் போலவே ஆனால் சற்று நல்ல முறையில் இருக்கிறது. நடந்து வந்து பார்த்தீர்களா
 பிரம்மா


 துர்கை இடது புறம் சிங்க வடிவில் அரக்கனை வதம் செய்யும் சிற்பம்

இது ஒரு குகை உள்ளே செல்ல முடியாது. தடுப்பு
இப்போது இதன் வழி வாருங்கள் அடுத்த தளத்திற்குச் செல்வோம்
இதோ அடுத்த 2 வது தளத்திற்குப் படிகள்...
இதோ இரண்டாவது தளம் வந்துவிட்டோம்..
நேரே ஆஞ்சநேயர் தெரிகின்றாரா...பாவம் அவரது கால் சற்றுச் சிதைந்துள்ளது..கதவு, வாயில் தெரிகின்றது இல்லையா அங்குதான் அனந்தபத்மநாப ஸ்வாமி

அனந்தபத்மநாப ஸ்வாமி சிறப்பு என்னவென்றால் 5 மீ நீளத்தில் ஒரே கிரானைட்கல்லில் செதுக்கப்பட்டிருப்பது
பத்மநாப ஸ்வாமியின் பாதங்கள்
2வது  தளத்தில் வெளியே இருக்கும் சிற்பங்கள்/சிலைகள்.  இனி அடுத்த 3 வது தளம் கடைசித் தளத்திற்குச் செல்வோம் வாருங்கள்
இதுதான் மூன்றாவது தளம். இதில் இரு குடைவரைகள் அவ்வளவே.  அதற்குள் அமர்ந்து எல்லோரும் படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை எடுக்க முடியாத அளவிற்குப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதால், மக்கள் இருந்து கொண்டே இருந்ததால் என்னால் அதை எடுக்க முடியவில்லை
அடுத்து இங்கிருந்து எடுக்கப்பட்டக் காட்சிகள்
இந்தக் குகைகளின் கீழே பக்கவாட்டில் நடந்து சென்றால் கழிவறைகளும், இன்னும் சற்று தூரம் நடந்து சென்றால் சிறிய குடைவரை, நரசிம்மரும். ஆனால் மொபைல் திடீரென்று வேலை செய்யாததால் எடுக்க முடியவில்லை.


இந்தக் குடைவரை குகைவழி மங்களகிரியில் இருக்கும் பானக நரசிம்மர் கோயிலை அடைவது போல் முன்பு இருந்ததாகவும் இப்போது அது அடைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டது. இங்கிருந்து விஜயவாடா 6 கிமீ.  அங்கிருந்து தெனாலி, வட்லமுடி வந்து அடுத்த தினம் தெனாலியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தோம். வட்லமுடியிலிருந்து காலை 5 மணிக்கு தெனாலி ரயில் நிலையத்திற்குப் பேருந்து இருந்தாலும், முதலில் ஷேர் ஆட்டோ வந்ததால் அதில் பயணித்தோம். 13 கிமீ. ரயில் நிலைய வாசல்வரை. ரூ 10 ஒருவருக்கு. 
சரி நன்றாகச் சுற்றிப் பார்த்தீர்கள்தானே. இத்துடன் பயணக் கட்டுரை முடிகின்றது. இனி அடுத்த பயணம் மேற்கொள்ளும் போது பயணக் கட்டுரை எழுதுகின்றேன். என்னுடன் பயணித்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. 

---கீதா



செவ்வாய், 19 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்

அமராவதி பேருந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் ஆந்திரமாநில சுற்றுலாத் துறை வளாகத்திற்குள் இருக்கும் அருங்காட்சியகம்.  அருங்காட்சியகத்திற்குள் செல்வோம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நுழைகின்றோம். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ 5. புகைப்படம் எடுக்க ரூ 20. அது காமேராவாக இருந்தாலும், மொபைலாக இருந்தாலும்.
நுழைவு வாயிலின் இடது புறம் வெளியில் இருக்கும் சிற்பம்
நடுவில் இருக்கும் புத்தர் - செதுக்கப்பட்ட சிற்பம்
புத்தரின் வாழ்க்கை வரலாறும் - 4 வகை ஸ்கூல் ஆஃப் ஆர்ட் பற்றியும்
இந்த ஸ்தூபி பற்றித்தான் சென்ற பதிவு

நுழைவு வாயிலின் அறையில் நடுவில் பெரியதாக புத்தரின் சிலை இருக்கிறது. புத்தரின் வரலாறும், பல சிற்பக்கலைகள் பற்றிய விவரங்களும் சுவரில் இருக்கின்றன. இடது பக்கமாக உள்ளே நுழைந்தால் சுவரில் ஆந்திர தேசத்து வரலாறும், பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டச் சிற்பங்களைப் பற்றிய தகவல்களுடன் மிக அழகா நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
ஆந்திராவில் பௌத்தம் - புத்தரைப் பற்றி அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட இடங்கள் பற்றிய வரைபடம்.

புத்த சிற்பக்காட்சியகத்திற்குள் ஆந்திரமாநிலத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, சந்தாவரம், ஃபானிகிரி, துலிக்கட்டா, உப்புகுண்டூர், அமராவதியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்டதும் மற்றும் சென்னை மாகாணத்திலிருந்து 1919-20ல் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றச் சிற்பங்களும் இருக்கின்றன. இங்கிருக்கும் சிற்பங்களில் காந்தாரம், கிழக்கிந்திய பிஹார், பெங்கால் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்திலிருந்து 1919-20 ல் கிடைக்கப்பெற்றவையும் அடங்கும்.

அமராவதி சிற்பக்கலை (Amaravati School of Art) : தன்யகடக-தனகட்டா என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி ஆந்திரவில் பௌத்தமையமாக இருந்தது. அயகா(ayaka) தூபியிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து, இங்கு புத்தரின் புனித எலும்புத் துண்டுகள், புனிதமாக்கப்பட்டு அதன் மீது மஹா சைத்யா ஸ்தூபி எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.

காந்தார சிற்பக்கலை : இது மேற்கத்திய ஹெல்லெனிஸ்டிக் மற்றும் ஈரான், இந்தியக் கலப்பில், குஷானர்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த வழிக் கலையில் புத்தர் மனித உருவில் அப்போலோவப் போன்ற அழகுருவில், இந்திய கிரேக்க கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆண்கள் உருவத்தில் மீசை இருப்பது போல் உருவாக்கப்பட்டது. மெல்லிய துணிகளால் போர்த்தப்பட்டு, உடம்பின் வடிவமைப்புத் தெரிவது போன்றும், வட்ட வடிவாமான முகங்களுடனும், நல்ல செழுமையான உடல்வாகு இருப்பது போன்றும், இந்திய மண்ணின் உடை அமைப்பிற்க்கு அப்பாற்பட்ட உடைகளுடன் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டது.  அமராவதி, நாகார்ஜுனகொண்டா சிற்பக்கலையில் காந்தார சிற்பக்கலையின் தாக்கம் விரவி இருக்கிறாது. இந்தக் காட்சியகத்தில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இந்தக் காந்தார சிற்பக்கலை முறையில் செதுக்கப்பட்டச் சிற்பங்களைக் காணலாம்.

பால (Pala) சிற்பக்கலை : பால வம்சம் பிஹார், மேற்குவங்காளப் பகுதிகளை 400 வருடங்களாக ஆண்ட போது, வஜ்ராயன புத்த சிற்பக் கலை வேகமாக வளர்ந்து வந்தது.  இந்த வகைச் சிற்பங்கள் அப்பகுதியில் கிடைத்த சாம்பல், கறுப்பு நிற க்ளோரைட் கற்களில் செதுக்கப்பட்டன. இச்சிற்பக்கலையில் புத்தர். நான்கு வகை முக்கியமான தெய்வநிலையில் – அமிதபா, ரத்னசம்பவா, அக்ஷோபயா மற்றும் அமோகசித்தி  என்று பொதுவாக “பஞ்ச புத்தர்கள்” என்று வடிவமைக்கப்பட்டார். அதிபுத்த வைரோச்சனா – முதன்மையான நடுவிலிருக்கும் நிலை. இப்போது சிற்பங்களைப் பார்ப்போமா.


இந்தப் படத்தில் இடது புறம் இருப்பது பூர்ணகும்பம் உடைந்த நிலையில். நடுவில் இருப்பதும். இது பண்டு விஹாரத்திற்குள் செல்லும் முன் இருக்கும் கதவுகளின் இரு பக்கமும் இருக்கும். இவை புத்தமதத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதாக சதவாஹன காலத்தில் இருந்தன. இந்தத் தனித்தன்மையுள்ள பூவேலைப்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டில் உருவான விஜயநகரத்துக் கோயில்களில் வெளிப்புறத் சுவர்களில் காணப்படுகின்றன. இது ஆந்திர மாநிலத்து அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது. 
இது ஃபானிகிரியில் இருந்துப் பெறப்பட்டது.  புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பது. கபிலவஸ்துவை விட்டு வெளியேறி குதிரையில் செல்லுதல், நடுவில் இருப்பது அரச வாழ்வைத் துறந்து துறவறம் பூணுதல், மேல்பகுதி டுசிட்ட சொர்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல். படம் அவ்வளவுத் தெளிவாக இல்லை

புத்தரின் பாதம் - கி.மு. 1 வது நூற்றாண்டு - கி.பி. 1 வது நூற்றாண்டு - அமராவதி
புத்தரும் அவரது சீடர்களும்

அமராவதி சிற்பக்கலை
ஹைநயன பௌத்தம் குறித்த சிற்பங்கள். ஹைநயன என்பது மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த மஹாயன பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் வழங்கிய பெயர்.
சிபிச் சக்கரவர்த்தி-புறா கதையை விளக்கும் சிற்பங்கள்
சந்தாவரம் சிற்பங்கள்.
நந்தயால்பாலெம் சிற்பங்கள்-நந்தயால்பாலெம் குண்டூர் மாவட்டத்தில் சந்தவோலு எனுமிடத்திலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது.  குண்டூரிலிருந்து 45 கிமீ. இது தொடக்ககால விரிவான வரலாற்றில்  இடம்பெற்ற ஊர். இங்கு விவசாயத்திற்காக நிலம் தோண்டப்பட்ட போது அரியவகைச் சிற்பங்கள் நிறைய கிடைத்தனவாம்.கி.பி 1 வது நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரஹ்மி முத்திரயுடன் கூடிய கல்வெட்டு எழுத்துகளுடன் கிடைத்தன.

நடுவில் இருப்பது தாமரை பதக்கம்-அருகில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிதிலமடைந்த சிற்பங்கள்

இன்னும் நிறைய படங்கள் மொபைலில் எடுத்தேன். ஆனால், தெளிவாக இல்லாததால் தர இயலவில்லை. நிறைய பயனுள்ள குறிப்புகள் பல உள்ளன. தொல்பொருள் அகழ்வராய்ச்சியில், குறிப்பாக பௌத்தம் குறித்து ஆய்வு செய்பவர்களும், அருங்காட்சியகம் கண்டு தகவல்கள் அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களும் நேரில் சென்று அறிந்து பயனடையலாம். அருமையான அருங்காட்சியகம். 

இதன் அருகிலேயே ஆந்திரா சுற்றுலாத்துறை உணவகம் இருக்கின்றது. (சைவம், அசைவம் இரண்டும் உண்டு. பிரியாணி வகைகள், கலந்த சாதம், சாப்பாடு, வட இந்திய உணவுகள், ஆந்திரா உணவு என்று கிடைக்கின்றன) சைவச் சாப்பாடு ஒன்று ரூ 100. அளவு என்றெல்லாம் கிடையாது. சேமியா கேசரி, சாம்பார், ரசம், கோங்குரா சட்னி/தொக்கு, ஒரு கூட்டு, பப்பு, தயிர் (அருமை) ஆவக்காய், ஒரு கறி-அன்று கோவைக்காய் வட்டவடிவில் வெட்டி வறுத்து, அதனுடன் வெங்காயம், அவல் எல்லாம் கலந்து செய்யப்பட்டிருந்தது (அருமை) மொத்தத்தில் உணவு நன்றாக இருந்தது. 

அடுத்து விஜயவாடாவிற்குச் செல்லும் பேருந்தில் ஏறி ஊண்டவல்லிக் குகைகளைக் காணச் செல்வோமா? ஒரு மணி நேரப் பயணம். தொடர்கின்றேன். (அடுத்தப் பதிவுடன் எனது பயணக்கட்டுரை முடிவடைகின்றது.)

(இந்த அருங்காட்சியகங்களைக் கண்ட போது நம் முனைவர் ஜம்புலிங்க ஐயாவைப் பெரிதும் நினைத்துக் கொண்டேன். அவருக்காகவே இன்னும் நிறைய படங்கள், குறிப்புகள் எடுத்தேன். ஆனால் தெளிவாக இல்லாததால் கொடுக்க இயலவில்லை.)

-----கீதா