சனி, 21 செப்டம்பர், 2013

கவிதைகள்


கீழ் வரும் கவிதைகள் எனது புதிய நண்பர் ப்ரசன்னா வெங்கடேசன் என்னும் 23 வயது இளைஞனின் கவிதைகள்.  இவரைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், இவர் எனக்கு சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் கிடைத்த ஒரு துடிப்புள்ள, வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைய நண்பர்.  மிகுந்த இறை உணர்வு உள்ளவர். நல்ல சிந்தனைகளும், குணங்களும், நோக்கங்களும் உள்ள ஒரு இளஞர். Bike Stunt வித்தையில் தேர்ந்தவர்.  அதனால் சில வீரத்தழும்புகளின் முத்திரைகளை அவர் முகத்திலும் கையிலும் காணலாம்.  நடிகர் அஜீத்தின் தீவிர ரசிகர்.  உங்களுக்கே காரணம் புரிந்திருக்கும்...சினாமாவில் stunt செய்து நடிக்க ஆசை உள்ளவர்.  இதைப் படிக்கும் யாராவது அவருக்கு உதவ முடிந்து, ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முன்வந்தால் அது இவரது வாழ்வில்  ஒரு மைல் கல்லாக அமையலாம்.  காதலித்து தோல்வி கண்டவர்.  ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து, 3 வருடங்கள் பழகிய பின், அப்பெண் வேறு ஒருவரை  மணம் முடித்ததால், காதல் தோல்வி.  அதன் வெளிப்பாடு அவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.

தாய்
உன் அழுகையைப் பார்த்து
உன் தாய் சிரித்து ரசித்த நாள்
நீ பிறந்த நாள்
உன் அழுகையைப் பார்க்காமல்
அவள் உறங்கி நாள்
அவள் இறந்த நாள்.
உன் தாய் கண்ணீர் விடுவது யாவும்
உனக்காகத்தான்மறு ஜென்மத்திலும்
உனக்குப் பிறப்பாள் மகளாக.
------------------------------------------------------------------------------
ஒரு நிமிடம்-ஒரு ஜென்மம்
ஒரு நிமிடம் போதும்
            அதிகம் நேசிப்பதற்கு
ஒரு நிமிடம் போதும்
            சண்டை போட்டு பிரிவதற்கு
ஆனால்
ஒரு ஜென்மம் போதாது
            நேசித்த ஒருவரை மறப்பதற்கு
வாழ்க்கையை மட்டும் நேசி
சண்டையைப் பற்றி யோசிக்காதே.

மனித நேயம்

கரையில்லாத கடலும் இல்லை
காற்றில்லாத மரமும் இல்லை
வாசமில்லாத பூவும் இல்லை
பாசமில்லாத தாயும் இல்லை
அது போல்
அன்புக்கு என்றும் பஞ்சமில்லை
ஆதலால்
அனைவரிடமும் அன்பு காட்டுவதுதான்
உண்மையான மனிதத் தன்மை.


 கேள்வி ஒன்று

என்னால் தான் நீ பிறந்தாய்
என்னுடன் தான் நீ வளர்ந்தாய்
பின் எதற்காக மேலிருந்து
கீழே விழுந்து தற்கொலை?
செடி மலரிடம் கேட்டது.


காதல்
காதல்,
இரு கண்கள் பேசிக் கொள்ளும்
ஒரு மொழி.
இரு எண்ணங்களையும் ஒன்றாக நேசிக்கும்
ஒரு உணர்வு
ஒருவர்க்கொருவர் புரிந்து கொண்டு
வாழ்வது போல்
வாழ்வைத் தொடங்குவார்கள்
வாழ்வு முறியும் போது
வெளிச்சத்திற்கு வருகிறது
வாழ்ந்த காதல் உண்மை அல்ல என்று.
என்னுடைய வாழ்க்கையைப் போல்.
                         -பிரசன்னா.
------------------------------------------------------------------------


ஒரு கிராமத்துப்  பெண்ணின் ஏக்கம் 

கம்பங் காட்டு கொல்லையில
கண்மாயில காத்திருக்கேன்
சமயத்துல வருவியளா
சாதி சனம் வாரதுக்குள்ள

கஞ்சித் தண்ணி வெச்சுத் தாரேன்
கொஞ்சி கொஞ்சி ஊட்டித் தாரேன்
எஞ்சிப் போற கஞ்சித் தண்ணிய
வஞ்சி எனக்கு ஊட்டுவியளா

சோலியெல்லாம் செஞ்சுகிட்டு
சிரிச்சி சிரிச்சி பேசிக்கிடுவோம்
சாதி சனம் பாத்துபுட்டா
பாதியில ஒளிஞ்சிகிடுவோம்

கண்ணு பேசுற சேதியெல்லாம்
ஒண்ணு விடாத சேப்பியளா
கருக்கையில சனம் போன பொறவு 
பொறுமையா காதுல பேசிக்கிடுவோம்

பம்புசெட்டு பக்கத்துல
வம்பாயிட்டு நிக்கிறதுகள
பம்மவைச்சு வெரட்டிடுவோம்
நம்ம கதைய வளத்துக்குவோம்

குளத்தங் கரையில பாத்துக்கிடுவோம்
களனியில திரிஞ்சுகிடுவோம்
ஆத்தோரமா நடந்துகிட்டே கருப்பு
காத்து படாம கட்டிக்கிடுவோம்

சத்தமிலாம ஒட்டிகிட்டு
முத்தமெலாம் கொடுத்துகிட்டு
காவாளிங்க வரதுக்குள்ள
கவனமா பிரிஞ்சுக்கிடுவோம்

காட்டுல நாம சுத்திக் கிடக்கையில
போட்டுக் கொடுத்தாய்ங்க களவாணிங்க
கறுவி கறுவி சனங்க செலது
அறுவாளத் தூக்கிட்டு அலயுதுங்க

மச்சான் நீங்க இருக்கயில
அச்சாரம் போடுதுங்க வீட்டில
கிறங்கி மயங்கி கெடக்குறன் நான்
உறக்கம் இல்லாத விசனத்துல

சேதி சொல்லி அனுப்புறேன்
கெதிகலங்கி போறதுக்குள்ள
காத்துக் கெடக்கேன் ஒங்களுக்கு
பத்திரமா வாரியளா

ஒத்தயடிக் கொல்லையில
செத்த நேரம் பேசிக்கிடுவோம்
பத்தவெச்ச கதைய பத்தி
பதவிசா முடிக்கிற சோலிய பத்தி.

பயப்படாத வீட்டுக்கு வாரிகளா
ஐயப்படாத கண்ணாலம் பேசுரிகளா
ஒங்களோட என்னய கூட்டிட்டுப் போறீகளா
ஒங்களுக்காக பொறந்து காத்துருக்கேன் நான்! 


மின்னல்

வானம்
பூமியின் அழகில் 
மயங்கி எடுக்கும்
ஃபோட்டோ ஃப்ளாஷ்.


ஏழையின் குடை

விண்ணில் மட்டும்தான்
நட்சத்திரங்களா
என் குடையிலும்தான்
நட்சத்திர பங்களா!
உடலை வருத்தலாம் வறுமை
உள்ளத்தையும், ஆன்மாவையும்
வருத்த முடியுமா? வறுமை?
வறுமைக்கு முடிவுண்டு
வறுமையிலும் கற்பனைக்கு
இறுதிவரை முடிவில்லை.
ஏழையின் இந்த கற்பனையை
என்னவென்று சொல்வது?
எண்ணி வியந்திடாமல்
விலகிட இயலவில்லை.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக