சனி, 23 செப்டம்பர், 2017

இனி அம்மாவுடன்......!

நகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்! வாழ்க்கையிலும் நாம் மேலே செல்லச் செல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் இப்படித்தான் சிறியவைகளாக, அற்பமாகத் தெரியத் தொடங்கிவிடுகின்றதோ? விந்தையான மனம் கீழே மீண்டும் வேடிக்கை பார்த்தது.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 11 - கா...கா...கா...என்னை கா 2

கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன். 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1

"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு என் முன்னால் பறக்க முயற்சி செய்தா போதும். தாந்தோன்றித்தனமா பறக்க முயற்சி செய்யாதே” னு அம்மா சொல்லிட்டுத்தான் போனாங்க. நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணன் எங்கு போனானோ அவனையும் காணவில்லை. சரி அதோ ஏதோ தரை தெரிகிறதே! அங்கு போய் பார்ப்போம்னு கொஞ்சம் பறக்க முயற்சி செய்து தத்தி நடக்கத் தொடங்கின்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்வதால், “த க்ரேட் அமெரிக்கன் கிரகணம்” என்று வரலாற்றுப் பதிவாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். 

நேற்று என் மகனுடன் பேசிய போது அவன் பேச்சில் துள்ளல், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆர்வம், உற்சாகம் என்று பல கலவையான உணர்வுகள். சிறு வயது முதல், இப்படி அவன் பேசும் நேரத்தில் ‘ம்மா, ம்மா, ம்மா’ என்று பேச்சின் இடையே நொடிக்கொரு முறை சொல்லுவது வழக்கம். இப்போது அதன் டோன் சற்று வேறு அவ்வளவே! இந்த ‘ம்மா ம்மா’ என்று அவன் பேசியதும் சிறு வயதில் அவன் உற்சாகமாக என்னுடன் பகிர்பவை எல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் அவை மற்றொரு பதிவில்.

நேற்றைய “ம்மா ம்மா”! எல்லாம் சூரியகிரகணத்தின் தாக்கம்!!! அமெரிக்காவில் மகன் இருக்கும் மாநிலமான ஆரெகனில் தான் சூரிய கிரகணத்தின் தொடக்கம் அப்படியே அமெரிக்காவின் குறுக்காகச் சென்று கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் 3 மணிக்கு முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நேரம் வித்தியாசப்படும்.

முழு கிரகணம் இரண்டு நிமிடம் என்றும் மொத்த நேரம் 2.30 மணி நேரம் என்றும் சொன்னான். 9.30 அளவில் தொடங்கி 12 அளவில் முடியும், அதாவது இவன் இருக்கும் மேற்குப் பகுதியில், 12 லிருந்து மூன்று மணி நேரம் கூட்டிக் கொண்டால் 3 மணிக்குக் கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் முடியும். இந்தக் கிரகணப் பாதையில் இருக்கும் இடங்களில் 50 கிமீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். வானம் மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் நன்றாகத் தெரிய வாய்ப்புண்டும் என்று சொல்லுவதாகச் சொன்னான். முழு கிரகணம் 10.16க்குத் தொடங்கி 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்திருப்பதாகச் சொன்னான்.

மகன் இருக்கும் கார்ன்வேலிஸிலும் முழு கிரகணம் தெரியும் என்றான். அதுவும் 50கிமீ சுற்றுவட்டாரம் மட்டும் தான் முழு கிரகணம் தெரியும். அதே போன்று கிரகணத்தின் பாதை தவிர பிற பகுதியில் எல்லாம் பகுதிதான் தெரியுமாம். இருந்தாலும் எல்லோருமே அதற்கான கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் என்பதால் கல்லூரி கிளினிக்கில் அதற்கான கண்ணாடி எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். கிரகணப் பாதையில் ஒவ்வொரு இடத்திலும் காலநிலை வித்தியாசப்படுமாம்.

கிரகணத்தின் போது புதன், வெள்ளி, செவ்வாய், மற்றும் ஜுபிட்டர் கோள்களைப் பார்க்க முடியும் என்றும் அதை எப்படி அடையாளம் காணலாம் என்றும் படங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். இதற்காகப் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் இப்பகுதியில் அதாவது முழுமையாகத் தெரியும் பகுதியில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து முதல், கார் நிறுத்தும் இடம் எல்லாம் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு, எல்லாம் ஒழுங்கு முறையாக நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதாம். 

வழக்கமாக அவன் காலை 6.30 மணிக்குள் கிளம்பிவிடுவான். இன்று 8 மணிக்கு கிளினிக்கில் இருந்தால் போதும் என்றும் 12 மணி வரை எந்த நாலுகால் நோயளிகளும் வர மாட்டார்களாம். இந்தக் கிரகணத்தின் போது சூரிய ஒளி மங்கி மாலை மயங்கும் நேரம் போன்றும் முழு கிரகணத்தின் போது இரவு போன்றும் ஆகிவிடுவதால் அந்த நேரத்தில் விலங்குகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொன்னான். வீட்டில் வளர்க்கப்படும் செல்லங்களை விட இரவு நேரத்தில் சுறு சுறுப்பாக இருப்பவை, வந்த சூரியன் திடீரென்று எங்கு காணாமல் போனான் என்று குழம்புமாம். கிரகணத்தின் போது வழக்கமான வெயில் அளவிலிருந்து 10 டிகிரி குறையுமாம்.

அவர்களுக்குக் கல்லூரியில், கிளினிக்கில் எல்லாம் அரை மணி நேரம் அவர்கள் வகுப்பிலிருந்தும் ட்யூட்டியிலிருந்தும் வெளியில் வந்து பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்ததால் மகனும் மிகவும் ஆர்வமாக இருந்தான், எனக்குப் படம் அனுப்புவதாகவும் சொன்னான். இது அவன் அவனது இரவு நேரம் 11 மணிக்கு அதாவது நமது காலை நேரம் 11.30 க்குச் சொன்னவை. கிரகணத்திற்கு முன்.  இனி கிரகணத்திற்குப் பின்..

இதோ இப்போது முழு கிரகணத்தின் படம் அனுப்பியுள்ளான்.


கூடவே வாட்சப் மெசேஜும்…”ம்மா சூரியன் உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிந்தது. கிரகணம் தொடங்கியதுமே கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் டிகிரி குறையத் தொடங்கியது. முழு கிரகணத்தின் போது சடாரென்று செம குளு குளு என்று இருந்தது. இரண்டு நிமிடத்திற்கே இப்படி என்றால், சூரியன் ஒரு சில மணி நேரம் முழுவதும் மறைக்கப்பட்டு சூரிய ஒளியே உலகிற்கு இல்லை என்றால் பூமியே உறைந்துவிடும் இல்லையா. ‘ம்மா’ நல்ல அனுபவம் ‘ம்மா"

நமது காலை 11.30 மணி அளவில் அதாவது அவனது இரவு 11 மணி அளவில் - பெரும்பாலும் இந்த நேரம் தான் ரூமிற்கு வருகிறான் - பேசினால் ஏதேனும் சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும் என்பது உறுதி. 

-----கீதா